வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான் ;
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான் ,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியிலுள்ள உயிரெலாம் நான்
கம்பனிசைத்த கவியெலாம் நான்
காருகர் தீட்டும் உருவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்
இன்னிசை மாத ரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்
மந்திரங் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்